சென்னை: ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து அந்த இடங்களில் உலக தரத்திலான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடந்து வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது: சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பிரிவுகள், கட்டமைப்பு வசதிகள், செயல்பாடுகள், ஏற்கனவே நடந்த வளர்ச்சி பணிகள் குறித்தும், தற்போது நடைபெற வேண்டிய வளர்ச்சி பணிகளையும் விரைவுப்படுத்த வேண்டும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஓட்டல்களில் தரமான உணவு வழங்குதல், விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் வளாகங்களை தூய்மையாக பராமரித்தல் உள்பட உயர் தரமான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
2025-26ம் ஆண்டில் சுற்றுலாத்துறை அறிவுப்புகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து அந்த இடங்களில் உலக தரத்திலான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பான முறையில் விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் சுற்றுலாத்துறை செயலாளர் மணிவாசன், ஆணையர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஓட்டல் மண்டல மேலாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.