புதுடெல்லி: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்வது மோடி அரசின் பழிவாங்கும் செயல் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: எங்கள் முக்கிய எதிர்க்கட்சி கூட்டத்திற்கு சற்று முன்பு தமிழக உயர் கல்வி அமைச்சர் கே.பொன்முடிக்கு எதிரான அமலாக்கத்துறை ரெய்டுகளை நாங்கள் கண்டிக்கிறோம். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கும், பிளவுபடுத்துவதற்கும் இது மோடி அரசின் யூகிக்கக்கூடிய ஸ்கிரிப்டாக மாறிவிட்டது. மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக ஒரே எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. ஜனநாயகத்தை அவமதிக்கும் இந்த கோழைத்தனமான தந்திரோபாயங்கள் எடுபடாது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்: தற்போது தமிழ்நாடு உயர் கல்வி அமைச்சர் பொன்முடி மீதான அமலாக்கத்துறை ரெய்டுகளை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். அவர்கள் கட்சிகளை உடைத்து அனைவரையும் அமலாக்கத்துறை மூலம் பயமுறுத்த முயற்சிக்கின்றனர். அமலாக்கத்துறையும், தேசிய ஜனநாயக கூட்டணியும் பங்காளிகளாக உள்ளனர். அப்படி மட்டும் இல்லாமல் இருந்தால் பாஜவில் உள்ள பல தலைவர்களும் வெளியேறியிருப்பார்கள். அமலாக்கத்துறை மூலம் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை நீங்கள் பயமுறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.
ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லாலுபிரசாத்: தமிழக அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை ரெய்டுக்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறோம். இத்தகைய சோதனைகள் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையை தான் ஏற்படுத்தும். இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரான கொள்கைகளை எதிர்க்கும் தலைவர்களை பலவீனப்படுத்தும் என்று இந்த பாசிச பாஜ அரசு நினைத்தால், அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். உங்கள் சோதனைகளும் கைதுகளும் எங்களை ஒரு அங்குலம் கூட பின்னுக்குத் தள்ளாது.