திருவனந்தபுரம்: அமைச்சர் பதவியை விட சினிமா தான் எனக்கு முக்கியம் என்று மலையாள நடிகரும், ஒன்றிய இணையமைச்சருமான சுரேஷ்கோபி கூறியுள்ளார். பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து இவர் ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி பேசியது: எனக்கு அமைச்சர் பதவியை விட சினிமா தான் முக்கியம். 22 படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியுள்ளேன்.
இந்தப் படங்களில் நடிக்க அனுமதி வேண்டும் என்று கூறி நான் அமித்ஷாவிடம் ஒரு கடிதம் கொடுத்தேன். அவர் அந்தக் கடிதத்தை கோபத்தில் தூக்கி வீசி விட்டார். சினிமாவில் நடிக்க அனுமதி கிடைக்காவிட்டாலும் எனக்கு கவலை இல்லை. செப்டம்பர் 6ம் தேதி ஒற்றக்கொம்பன் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சினிமாவில் நடிக்கும் காரணத்திற்காக அமைச்சர் பதவியை விட்டு என்னை நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை. சினிமா இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன். இவ்வாறு பேசினார். சுரேஷ் கோபியின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.