சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நெடுஞ்சாலை, எரிசக்தி, கூட்டுறவு, உணவு துறை அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வியூகம் வகுத்து வருகின்றன. ஆளும் திமுகவை பொறுத்தவரை, 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி வருகிறது.
மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்னும் இயக்கத்தை தொடங்கி கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி மூலம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துறை சார்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நெடுஞ்சாலை துறை, சிறு துறைமுகங்கள் துறை, மின்சாரத்துறை மற்றும் போக்குவரத்து துறை, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வவேலு, பெரியகருப்பன், சக்கரபாணி, சிவசங்கர் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், துறை சார்பான செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம், ஒவ்வொரு துறை சார்பில் தனித்தனியாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த கூட்டங்களில் துறை சார்பாக நடைபெற்ற மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை, எந்தெந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, முடிந்த திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களுடன் விவாதித்தார். தமிழகத்தில் 2026ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்து, முக்கிய திட்டங்களை மக்களின் செயல்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.