சென்னை: தென்கிழக்கு டெல்லியில் பாராபுல்லா வடிகால் அருகே உள்ள ஜங்க்புராவில் ‘மதராசி முகாம்’ என்கிற பெயரில் குடிசை பகுதியை கடந்த 1ம் தேதி பொதுப்பணித் துறை இடித்து தள்ளியது. இதில், 370 தமிழர்கள் வீடுகள் தரைமட்டமானது. இதையடுத்து, வீடுகளை இழந்த தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார். அதன்படி, மொத்தம் 370 குடும்பங்களில் தலா ஒன்றிற்கு ரூ.12000 மதிப்பிலான (ரூ.8000 நிதி உதவி மற்றும் ரூ.4000 அத்தியாவசிய பொருட்கள்) தொகுப்பும் வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது.
பயனாளிகளின் விபரங்களை சரிபார்த்து ஆவணங்களை பெறுவதற்காக 7 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு அதிக சிரமம் இல்லாமல் ஆவணங்கள் சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பயனாளிகள் நிவாரண தொகுப்பை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் வரை அவர்களுக்கான உணவு மற்றும் இதர வசதிகள் செய்து தரப்பட்டிருந்தது. அவர்களுக்கான நிவாரண தொகுப்புகளை தமிழர் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் நேற்று வழங்கினார். மேலும், ரூ.8000 நிவாரண தொகை மக்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. பின்னர், அவர் கூறுகையில்,‘தமிழர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதை தமிழ்நாடு முதல்வர் முதல்வர் அறிந்தார். இதையடுத்து, அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி உள்ளார்.
உடனே இங்கிருக்கின்ற டி.ஆர்.பாலு எம்.பி., டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனுக்கு உத்தரவு பிறப்பித்து, உடனே டெல்லி முதல்வரை சந்தித்து அவர்களுக்கு உதவிடுமாறு ஆணை பிறப்பித்தார். மேலும், இங்கிருப்பவர்களுக்கு முதல் கட்டமாக உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் சிறப்பு நிகழ்வாக வீடுகளை இழந்தவர்களுக்கு ஒருமுறை நிதியுதவியாக தலா ரூ.8 ஆயிரம் மற்றும் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மசாலாப் பொருட்கள் அடங்கிய ரூ.4 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பினை வழங்கி உள்ளார்’என்றார்.