சேலம்: போலிப்பத்திரப்பதிவு தொடர்பாக ஆதாரத்துடன் புகார்கள் வந்தால் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேற்று சேலம் மாவட்டம், ஓமலூர், மேச்சேரி உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மூர்த்தி கூறியதாவது: வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைத்திடும் வகையில் தொடர்ந்து பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் நடைபெறும் பதிவுப்பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்திடும் நோக்கில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதிவு செய்யப்படும் பத்திரங்களுக்கு எவ்வித காலதாமதமும் இல்லாமல் பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். எக்காரணம் கொண்டும் பொதுமக்களை காக்க வைத்திடக்கூடாது என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் போலிப்பத்திரப்பதிவு தொடர்பாக ஆதாரத்துடன் புகார்கள் வந்தால் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒரு மாவட்டத்தின் பத்திரப்பதிவுகளை அதே மாவட்டத்தில் மட்டுமே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.