சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 புதிய நுண்ணறிவு பிரிவு கோட்டங்களின் இணை ஆணையர்களின் பயன்பாட்டிற்கு புதிய வாகனங்களை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். வணிகவரி துறையில் செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், கடலூர், ஒசூர், திருப்பூர் 3 ஆகிய 6 கோட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இந்த கோட்டங்களின் இணை ஆணையர்கள் மற்றும் செங்கல்பட்டு, திருவாரூர், கடலூர், ஒசூர், திருப்பூர் 3, விருதுநகர் ஆகிய 6 புதிய நுண்ணறிவு பிரிவு கோட்டங்களின் இணை ஆணையர்களின் பயன்பாட்டிற்காக, ரூ.1.04 கோடியில், புதிதாக 12 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
சென்னை, நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த வாகனங்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிகவரி ஆணையர் தீரஜ்குமார், இணை நிர்வாக ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் வணிகவரி துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.