மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் பள்ளிக் கட்டடம், சமூக நலக்கூடம் மற்றும் கால்வாய் புனரமைப்பு, Eco Blocks மூலம் மழைநீர் சேமிக்கும் வசதி ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (12.06.2025) கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139, ஜாபர்கான்பேட்டை, சென்னை உயர்நிலைப்பள்ளியில் மூலதன நிதியின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் , ஜாபர்கான்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமூக நலக் கூடத்தினை ரூ.93.27 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி மற்றும் சுந்தரமூர்த்தி தெரு முதல் கண்ணம்மாள் தெரு வரை உள்ள கால்வாயில் ரூ.5.29 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைக்கும் பணி ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார். பின்னர், மழைநீரை சேமிக்கும் வகையில் வார்டு-140க்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் விளையாட்டுத் திடலில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவுடைய Eco Blocks மூலம் மழைநீர் சேமிக்கும் வசதியினைத் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ள புதுமையான மழைநீர் சேமிப்பு திட்டமாக, 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட Eco Blocks மூலம் மழைநீர் சேமிக்கும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது நிலத்தடி நீரை மேம்படுத்தவும், சென்னை மாநகரில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுப்பதற்கும், முக்கியமான நிலைத்த நீர் மேலாண்மை முயற்சியாகும். மழைநீரை சிக்கனமாக சேகரித்து, தரையை ஊடுருவச் செய்வதற்கான வடிவமைப்புடன் இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பூங்கா, நடைபாதை, சாலை மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற பகுதிகளில் மழைநீர் ஊடுருவ முடியாத இடங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மழைநீர் ஊடுருவும் வகையில் ஸ்பான்ச் போன்ற அமைப்பாக மாற்றி, அதன்பின் நிலத்தடி நீர் செறிவூட்டலை துரிதப்படுத்த ஆழ்துறை கிணறு அமைக்கப்பட்டு சீரமைக்கப்படுகிறது. இதன் மூலம் மழைநீர் நிலத்தில் ஊடுருவி நிலத்தடி நீரை மேம்படுத்தி, வெள்ள அபாயத்தை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில், மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ப. சுப்பிரமணி, எம். ஸ்ரீதரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.