சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 64 பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், 34 பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டு எஞ்சியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கனமழையின் காரணமாக பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளில் மொத்தம் 4 நிவாரண முகாம்களில் 190 நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 11 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று 52 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 789 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இதனை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைவழங்கப்பட்டுள்ளது என்று ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.