பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு ஆண்டுதோறும் சுமார் 1.20 கோடி பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர ஆறுகால பூஜைகளின் போது பிரசாதமாக இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பழநி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் நேற்று துவங்கியது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திட்டத்தை துவக்கி வைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கூறுகையில், ‘‘இத்திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 25 லட்சம் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கப்படும். தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பிரசாதம் வழங்கப்படும்.சுழற்சி முறையில் பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம், வெண் பொங்கல், தக்காளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், காய்கறி கூட்டு ஆகியவை வழங்கப்படும்’’ என்றார். இந்த திட்டத்திற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.