சென்னை: தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 7-வது கூட்டம் மற்றும் தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தின் 5-வது கூட்டம் நேற்று சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூடத்தில் தலைவர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் பேசியதாவது: 2024-2025ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி 1000 பெண், திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ மானியம் வழங்கும் திட்டம் மேலும் விரிவுப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது. இதன்படி 1500 பெண் பயனாளிகளுக்கு ரூபாய் 15 கோடி மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் ஓட்டுநர்கள் நல வாரியத்தில் 28.02.2025 வரை 1,02,978 பயனாளிகளுக்கு ரூ.79.06 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் 31.01.2025 வரை 1,38,690 பயனாளிகளுக்கு ரூ.65.82 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 2.42 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 145 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
2.42 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.145 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தகவல்
0