சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் கருத்தரங்கு கூடத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 6வது வாரியக் கூட்டம் நேற்று வாரியத் தலைவர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது. கண்கண்ணாடி வாங்குவதற்கான நல உதவித் தொகை ரூ.500லிருந்து ரூ.750 ஆக உயர்த்துதல், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு முறையே ரூ.50,000 மற்றும் ரூ.25,000 ஊக்கத் தொகை வழங்குதல், பணியின் போது விபத்து ஏற்பட்டு மரணமடையும் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு விபத்து மரண நிவாரணத் தொகை ரூ.5,00,000 வழங்குதல், வாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்கள் சொந்தமாக ஆட்டோ ரிக் ஷா வாங்குவதற்கு வாரிய நிதியிலிருந்து ரூ.1,00,000 மானியம் வழங்குதல் ஆகியவற்றுக்கு வாரியத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டது.
முன்னதாக, அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டியளிக்கையில், ‘‘தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை. இதனை கண்காணிக்க குழந்தைகள் நல ஆணையம் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு குழந்தை தொழிலாளர்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அம்பத்தூர் ஆவின் நிலையத்தில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக கூறியுள்ளீர்கள். அது குறித்து விசாரணை நடத்தப்படும், உறுதி செய்யப்பட்டால் விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.