புதுச்சேரி: சந்திர பிரியங்கா பதவி நீக்கத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை. இதனால் என்.ஆர்.காங்கிரசை உடைக்க திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்து துறையை வழங்கினார் முதல்வர் ரங்கசாமி. அவரது குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டதால், ரங்கசாமி காதுக்கு தகவல் சென்றது. இதுதொடர்பாக சந்திர பிரியங்காவை அழைத்து ரங்கசாமி அறிவுரை கூறினார்.
ஆனால் பலனில்லை. அவரது துறை ரீதியிலான நடவடிக்கையிலும் திருப்தி இல்லாததால் கடந்த 8ம் தேதி மாலை கவர்னர் தமிழிசையை, ரங்கசாமி சந்தித்து சந்திரா பிரியங்காவின் அமைச்சர் பதவியை நீக்க வேண்டும். அதற்கு மாற்றாக காரைக்கால் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்க கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இதனையறிந்த சந்திர பிரியங்கா, மறுநாள் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘சந்திரா பிரியங்கா பதவி நீக்கம் கடிதத்தை ஒன்றிய உள்துறை ஏற்கவில்லை. திருப்பி அனுப்பிவிட்டது’ என்றார். இதுபோன்று ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேற்று முன்தினம் பேட்டி அளிக்கும்போது, ‘நான் என்.ஆர்.காங்கிரசில் இருந்தேன். கடந்த சட்டசபையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அமைத்ததால் அதிலிருந்து வெளியே வந்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நான் நினைத்தது போன்று, என்.ஆர்.காங்கிரசை முழுமையாக பாஜவாக மாற்ற நெருக்கடி கொடுக்கிறது’ என்று பகீர் தகவலை கூறினார். இந்நிலையில் என்.ஆர்.காங்கிரசை உடைத்து ஆட்சியை பிடிக்கும் பணியில் பாஜ இறங்கி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பாஜவை சேர்ந்த முக்கிய பிரமுகர் கூறியதாவது: முதல்வராக ரங்கசாமி பதவியேற்றதில் இருந்து அறிவிக்கப்பட்ட புது திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை. ஒரு திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னதாக நிதித்துறை செயலரை அழைத்து நிதி நிலவரங்கள், முழுமையாக நிறைவேற்ற முடியுமா? போன்ற ஆலோசனைகள் செய்வதில்லை. சட்டசபையில் திடீர், திடீரென புதிய திட்டங்களை அறிவித்து அதற்கான நிதியை ஒதுக்க சொல்வார்கள். அவர்கள் (தலைமை செயலர், நிதி செயலர்) நிதி இல்லை என கூறிவிடுவார்கள். இதனால் எந்த திட்டங்களும் மக்களை முழுமையாக சென்றடைய வில்லை.
தமிழகத்தில் 2வது மாதமாக உரிமை தொகையும் பயனாளிகளுக்கு சென்றுவிட்டது. ஆனால் புதுவையில் ஜனவரியில் துவக்கிய திட்டத்தில் 60 ஆயிரம் பயனாளிகளில் 16,500 பேருக்கு மட்டும் முதல் தவணை மட்டும் தான் சென்றுள்ளது. மீதி பயனாளிகளுக்கு அதுவும் கிடைக்கவில்லை. அதன்பிறகு அந்த திட்டமே கிடப்பில் கிடக்கிறது. ஒன்றிய பாஜவின் பேச்சையும் ரங்கசாமி கேட்பதில்லை. டெல்லிக்கு சென்று பிரதமர், உள்துறை அமைச்சரையும் சந்திப்பது கிடையாது. சமீபத்தில் சென்னையில் நடந்த பாஜ கூட்டத்தில் புதுவையில் முழுமையான பாஜ அரசை அமைக்க வேண்டும் என உத்தரவு வந்துள்ளது.
அதன்படி என்.ஆர்.காங்கிரசில் உள்ள மூத்த எம்எல்ஏ மற்றும் அவருக்கு நெருங்கிய எம்எல்ஏ இழுக்க ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதேபோல் எங்கு சென்றாலும் ஜோடியாக சுற்றும் 2 எம்எல்ஏக்களையும் இழுக்க திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மூத்த எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி, ஒன்றாக சுற்றும் இரண்டு எம்எல்ஏக்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற 2 எம்எல்ஏக்களுக்கு ‘சி’ கணக்கில் பணம் முக்கிய வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என்று பாஜ சார்பில் உறுதி அளித்து பேச்சு நடந்து வருகிறது.
மிக விரைவில் என்.ஆர்.காங்கிரஸ் உடைக்கப்படும். நான்கு எம்எல்ஏக்கள் பாஜவுக்கு தாவுவார்கள். பதவியை ராஜினாமா செய்த பெண் அமைச்சரும் பாஜவுக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இதனால் 5 எம்எல்ஏக்கள் பாஜவுக்கு வருவார்கள். என்.ஆர்.காங்கிரசில் மொத்தமுள்ள 10 எம்எல்ஏக்களில் 4 எம்எல்ஏக்களை இழுத்தாலே போதும், பாஜவுக்கு தேவையான பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும். மூன்றில் ஒரு மடங்கு எம்எல்ஏக்கள் கட்சி மாறினால் கட்சி தாவல் தடை சட்டத்தால் பாதிப்பு வராது. அவர்களது பதவியும் தப்பும். இவ்வாறு அவர் கூறினார்.
என்.ஆர்.காங்கிரசில் இருந்து 4 எம்எல்ஏக்களை இழுத்தால், அவர்களில் இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும். பாஜவை சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவியும், கூடுதலாக ஒருவருக்கு அமைச்சர் பதவியும் கிடைக்கும். மீதி உள்ள எம்எல்ஏக்களுக்கு உடனடியாக வாரிய தலைவர் பதவியையும் கொடுத்து எந்த சலசலப்பும் இல்லாமல் செய்துவிடலாம் என பாஜ தலைமை கணக்கு போடுகிறது. என்ஆர்காங்கிரசை உடைத்து ஆட்சியை பிடிக்கும் வேலையில் பாஜ இறங்கி உள்ளது, என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய பாஜவின் பேச்சையும் ரங்கசாமி கேட்பதில்லை. டெல்லிக்கு சென்று பிரதமர், உள்துறை அமைச்சரையும் சந்திப்பது கிடையாது. சமீபத்தில் சென்னையில் நடந்த பாஜ கூட்டத்தில் புதுவையில் முழுமையான பாஜ அரசை அமைக்க வேண்டும் என உத்தரவு வந்துள்ளது. அதன்படி என்.ஆர்.காங்கிரசில் உள்ள மூத்த எம்எல்ஏ மற்றும் அவருக்கு நெருங்கிய எம்எல்ஏ இழுக்க ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.