ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலதில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் எதிர்கட்சியான பாஜ 85 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் 30 வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜ வேட்பாளர்கள் 4 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். முன்னாள் முதல்வர் ராமன் சிங் மற்றும் 3 வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். 4பேரின் வேட்பு மனு தாக்கலின்போதும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் இருந்தார். ராமன் சிங் ராஜ்ந்த் கோன் தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவர் 2008, 2013 மற்றும் 2018ம் ஆண்டு என 3 முறை அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியானது மூத்த ஓபிசி தலைவர் மற்றும் சட்டீஸ்கர் கனிம வளமேம்பாட்டு துறை தலைவரான கிரிஸ் தேவன்கானை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.