சென்னை : சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் எ.வ.வேலு வீடு, அலுவலகம், உறவினர்கள், வீடுகள், ஒப்பந்ததாரர்கள் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகனை தொடர்ந்து எ.வ.வேலு தொடர்புடைய இடங்களிலும் சென்னையில் அண்ணாநகர், தி.நகர். கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.கரூரில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
சோதனை நடைபெறும் இடங்களில் துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எ.வ.வேலு தற்போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை என இரு முக்கியமான துறைகளின் அமைச்சராக உள்ளார். எனவே அவர் வகிக்கும் துறைகளில் வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா என்ற அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் எ.வ/ வேலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.