சென்னை: திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று ஆலோசனை நடத்தினார். திமுக இளைஞரணி செயலாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், கட்சியின் அமைப்பு ரீதியாக இளைஞரணி 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து திமுக இளைஞர் அணிக்கு மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ஓராண்டு ஆகிறது.
புதிய நிர்வாகிகளின் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வந்தார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக 2 மண்டலங்களுக்கான நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆய்வு நடத்தினார். தொடர்ந்து மக்களவை தேர்தல் நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். மக்களவை தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து இளைஞர் அணியின் நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஆய்வு கூட்டத்தை நடத்த முடிவு செய்தார்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் 3வது மண்டலத்தில் அடங்கிய திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.
தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை சென்னை அன்பகத்தில் திருப்பத்தூர் மாவட்டம், வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரம், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட-மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி நிர்வாகிகளின் பணிகளை ஆய்வு செய்தார். நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்-இல்லந்தோறும் இளைஞரணி-கலைஞர் நூற்றாண்டு விழா-மக்களவை தேர்தல் பிரசாரம் என இளைஞரணியின் சார்பில் முன்னெடுத்த ஆக்கப்பூர்வமான பணிகளில் நிர்வாகிகளின் பங்களிப்பு குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
மேலும் கட்சி பணிகளை மேலும் சிறப்புடன் மேற்கொள்ள வாழ்த்துகளை அப்போது உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா வருகிற ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக கொண்டாட வேண்டும். ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், ரத்ததானம் போன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்று இளைஞரணி நிர்வாகிகளுக்கு அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.