திருப்போரூர்: திருப்போரூர் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். செங்கல்பட்டு அருகே மறைமலைநகரில் நேற்று மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து கோவளம் வழியாக தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள திருப்போரூர் அரசு பொது மருத்துவமனைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில், திருப்போரூர் அரசு மருத்துவமனைக்குள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நுழைவதை பார்த்து, தலைமை மருத்துவர் மைதிலி வரவேற்றார். அவரிடம் இங்கு எத்தனை மருத்துவர்கள் பணியில் உள்ளனர் என்பதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். அதற்கு, இங்கு 5 டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் பணியில் உள்ளனர் என தலைமை மருத்துவர் மைதிலி தெரிவித்தார். மேலும், இங்கு ஆம்புலன்ஸ் தயாராக உள்ளதே, எந்த நோயாளிக்காக காத்திருக்கிறது என அமைச்சர் கேள்வி எழுப்பினார். அதற்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளி மேல்சிகிச்சைக்கு அனுப்புவதற்காக ஆம்புலன்ஸ் காத்திருக்கிறது என தலைமை மருத்துவர் மைதிலி தெரிவித்தார். இதையடுத்து அந்நோயாளியை அமைச்சர் நேரில் சந்தித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்வதாகவும், அவர் விரைவில் உடல்நலன் பெற்று வீடு திரும்ப வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
பின்னர், திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிற நோயாளிகளிடம் நலம் விசாரித்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகளை மேலும், அங்கு வெளிநோயாளிகள் பிரிவு, கழிவறை, கட்டும் இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் தலைமை மருத்துவரிடம் வெளிநோயாளிகள் பிரிவை இன்னும் ஏன் கணினிமயமாக்கவில்லை என எழுப்பினார். அதற்கான கணினிகள் வந்துள்ளதாகவும் அப்பணிகள் முடிந்து விரைவில் கணினிமயமாக்கப்படும் என தலைமை மருத்துவர் உறுதியளித்தார். அங்கு கழிவறையில் மின்விளக்குகள் எரியாததை பார்த்து, இதுகுறித்து பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவியுங்கள். அவர்களின் உதவியுடன் அனைத்து விளக்குகளையும் புதிதாக மாற்றுங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.