சென்னை: நமது குழந்தைகள் பள்ளிப் படிப்பை நன்றாக படித்து முடித்து உயர்கல்விக்கு செல்ல வேண்டும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எல்லாம் பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பதுதான் நமது முதல்வரின், திராவிட மாடல் அரசின் ஒரே லட்சியம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்தார். கடந்த 2023-2024ம் கல்வி ஆண்டில் நடந்த சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ மாணவியர் மற்றும் 10, பிளஸ் 2 வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நமது குழந்தைகள் பள்ளிப் படிப்பை நன்றாக படிக்க வேண்டும். அதை முடித்த அத்தனை மாணவர்களும் உயர்கல்விக்கும் செல்ல வேண்டும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எல்லாம் பொறியாளர்களாக, மருத்துவர்களாக, ஆய்வாளர்களாக, அரசு அதிகாரிகளாக பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பதுதான் நமது முதல்வரின், திராவிட மாடல் அரசின் ஒரே லட்சியம்.
அதற்கேற்ப நமது முதல்வரும், பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரைப் பொருத்தவரையில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்று அவர் பிரித்துப் பார்ப்பதில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தனியார் பள்ளிகளில் இருக்கின்ற அனைத்து வசதிகளும் அரசுப் பள்ளிகளுக்கும் வர வேண்டும் என்று கருதுகிறார். தமிழ்நாடு கல்வியில் இன்று முன்னேறிய மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கும் தனியார் பள்ளிகள் கொடுக்கின்ற ஒத்துழைப்பும் காரணம்.
இன்றைய நிலையில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிப் படிப்பில் சேராமல் இருக்கும் மாணவர்களை எல்லாம் தொடர்பு கொ்ண்டு அவர்களை உயர்கல்வியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில்தான் நமது அரசு தனி முயற்சி எடுத்து வருகிறது. விளையாட்டுத்துறையில் சாதிக்கிற திறமையாளர்களுக்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசு முதல்முறையாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுன்டேஷன் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த அறக்கட்டளையின் மூலம் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு இதுவரையில் ஒரு வருடத்தில் மட்டும் ரூ.10 கோடி ஊக்கத்தொகை, நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் மாபெரும் நூலகத்தை முதல்வர் திறந்துவைத்தார். விரைவில் கோவை, திருச்சியிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வர இருக்கிறது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு 25 சத ஒதுக்கீடு வேண்டும் என்பது கட்டாயம். அப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளுக்கு, அரசே வழங்க வேண்டும் என்பது விதி.
ஆனால் கடந்த ஆட்சியில் இந்த கட்டணம் தாமதமாக வழங்கப்பட்டது. தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு சுமார் ரூ.1200 கோடியை பள்ளிகளுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: அரசுப் பள்ளிகளில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை கொண்டு வர வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம். அதற்கேற்ப ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
தனியார் பள்ளியும், அரசு பள்ளியும் பரஸ்பரம் இணைந்து செயலாற்ற வேண்டும். பள்ளிகளில் அரசுக்கு எந்த பாரபட்சமும் இல்லை. பெற்றோர், ஆசிரியர்கள், மணவர்கள், கல்வி நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை ஆகிய ஐந்தும் ஒரே நேர்கோட்டில் இருந்தால் தான் அடுத்தக் கட்ட வளர்ச்சி ஏற்படும் என்று முதல்வர் சொல்வதை அனைவருக்கும் நினைவூட்டுகிறேன். இவ்வாறு அன்பில்மகேஷ் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.