விருதுநகர்: “மறையூரில் சிதைந்துள்ள அன்னசத்திரம் பழமை மாறாத வகையில் முழுமையாக சீரமைத்து பாரம்பரிய நினைவுச் சின்னமாக மீட்டெடுக்க ஏற்பாடு செய்யப்படும்,” என்று நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் மறையூரில், ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கு முன்னர் 18 ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் பழம் பெருமை வாய்ந்த வழிப்போக்கர் மண்டபத்தை(சத்திரம்) இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜெயசீலன் IAS அவர்களுடனும், தொல்லியல் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடனும் இணைந்து பார்வையிட்டோம். அக்காலத்தில் இராமேஸ்வரம் போன்ற புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வோருக்கு தங்கவும், உணவு வழங்குமிடமாகவும் இம்மண்டபம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இம் மண்டபம் அமைந்துள்ள சாலை அந்நாளில் ‘ இராணி மங்கம்மாள் சாலை’ என வழங்கப்பட்டது. தற்போதும் அதைக் குறிப்பிடும் வகையில் இந்த நெடுஞ்சாலை ,பொது மக்களின் வழக்கு மொழியில் “ மானா சாலை” என்றே அழைக்கப்படுகின்றது. இவ் வழிப்போக்கர் மண்டபத்தை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன,”இவ்வாறு தெரிவித்தார். அதே போல மற்றொரு பதிவில், “விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்ட மன்றத் தொகுதி, நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.முக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்டு, பள்ளி மாணவர்களின் வசதிக்காக , சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், பொதுப்பணித் துறை சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறைகள் அமைப்பதற்கான எனது பரிந்துரைக் கடிதத்தினை தலைமை ஆசிரியை திருமிகு. முத்து ஜெயசீலி அவர்களிடம் வழங்கினேன். அரசு சார்பில் ஆய்வக உபகரணங்கள் வழங்கவும், கூடுதல் வகுப்பறைக் கட்டடம், சுற்றுச்சுவர் அமைக்கப்படவும் ஆவன செய்யப்படும் எனவும் உறுதியளித்தேன்,”இவ்வாறு தெரிவித்தார்.