சென்னை : நீட் தேர்வு தேவையற்றது என்பதை ஒன்றிய அரசே ஒப்புக் கொள்ள தொடங்கி இருப்பதால் சட்டப்பூர்வமாக நீட் தேர்வில் இருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பு கிடைத்து இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி சார்பாக மருத்துவ கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” நீட் தேர்வில் பங்கேற்று இருந்தாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பாணை அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பாணையின் மூலம் நீட் ஒரு தகுதி தேர்வே இல்லை என்ற ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் தனியார் கல்லூரிகளே அதிக பயன்பெறும் என்றும் அவர் கூறினார். இளநிலை மற்றும் முதுநிலையிலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் வலியுறுத்தினார்.நீட் தேர்வு தேவையற்றது என்பதை ஒன்றிய அரசே ஒப்புக் கொள்ள தொடங்கி இருப்பதால் சட்டப்பூர்வமாக இதில் இருந்து வெளியேற வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.