சென்னை: விடியல் பயணத் திட்டத்தினை மலைப்பகுதிகளில் விரிவுபடுத்திட ஏதுவாக ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.சிவசங்கர் தலைமையில், இன்று (30-08-2023), தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து, போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர் தி.ந.வெங்கடேஷ், அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், சாலைப் போக்குவரத்து நிறுவன இயக்குநர், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு நிர்வாக இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இவ்வாய்வுக் கூட்டத்தில், விடியல் பயணத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதனை மலைப் பகுதியில் உள்ள மகளிர் அனைவரும் பயன் அடையுமாறு விரிவுபடுத்த ஆய்வு செய்யுமாறு போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்கள். மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை கடந்துள்ளது. புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதையும், பழைய பேருந்துகளை புதுப்பித்து இயக்கும் பணியினையும் விரைவுப்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, பணிக்கு வராத பணியாளர்களை, பொதுமக்களின் நலன் கருதி, பணிக்கு தவறாமல் வருகை புரிந்து பேருந்துகளை இயக்கிட ஏதுவாக, அவர்களுடன் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொண்டார்கள். மேலும், எரிபொருள் செயல்திறன், பேருந்துகள் பயன்பாடு, இருக்கைகள் நிரப்பும் விகிதம், கிலோ மீட்டர் செயல்பாடு, நிதி நிலை செயல்பாடு ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்தார்கள். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட எதுவாக பணியாளர் நியமனத்திற்கான இணையகலாம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறையின் நிலையையும், கருணை அடிப்படையிலான பணி நியமன எண்ணிக்கையை அதிகரிக்க உள்ள சாத்தியக் கூறுகளையும் ஆய்வு செய்தார்கள். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அளிக்கப்படும் கோரிக்கைகளின் நிறைவேற்றுதலை ஆய்வு செய்தார்கள்.
உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தெரிவித்தார்கள். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கூடுதல் வருவாய்க்காக அமைக்கப்பட்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனையகங்கள், மின்சாரச் செலவை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் சூரிய மின் தகடுகள் நிறுவுதலின் தற்போதைய நிலையை குறித்து ஆய்வு செய்து விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார்கள். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்டு வரும் CCTV கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதையும், கைரேகை தொழில்நுட்ப வருகைப் பதிவேட்டையும் துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.
2023-ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்புகளின் அமலாக்க முன்னேற்றத்தினை ஆய்வு செய்தார்கள். மேலும், போக்குவரத்துக் கழகங்கள் வாரியாக உயிரிழப்பு விபத்துக்களின் எண்ணிக்கையை ஆராய்ந்து, அதனை வெகுவாக குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து, தொலைதூரப் பேருந்து பயணிகள் அனைவரும் இருக்கையை உறுதி செய்து பயணித்திட ஏதுவாக, பேருந்து பயணச் சீட்டு முன்பதிவு வசதியை தேர்ந்தெடுக்க பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். பயணிகள் உதவி எண்ணின் மூலம் பெறப்படும் பொதுமக்களின் குறைபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, அதனை உடனடியாக நிவர்த்தி செய்திட வேண்டும் என தெரிவித்தார்கள். மேலும், மழைக் காலம் தொடங்கி விட்டதால் மக்கள் எந்தவித இடர்பாடும் இன்றி பேருந்துகளில் பயணிக்க ஏதுவாக, பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்