சண்டிகர்: அரியானா அமைச்சருக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் பயிற்சியாளரை அரியானா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. அரியானா மாநில அமைச்சராக இருப்பவர் சந்தீப் சிங். சில மாதங்களுக்கு முன் விளையாட்டு துறையின் பெண் பயிற்சியாளர் ஒருவர் சந்தீப் சிங் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பரபரப்பாக குற்றம் சாட்டினார். இதையடுத்து சந்தீப் சிங்கிடம் இருந்த விளையாட்டு துறையை முதல்வர் மனோகர் லால் கட்டார் பறித்தார். இந்நிலையில், அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் பயிற்சியாளர் கடந்த 11ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால்,ஒழுங்கீனம், அரசு பணி நடத்தை விதிகளை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெண் பயிற்சியாளர் கூறுகையில்,‘‘ தன் மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. பணியில் இருந்து நீக்கினாலும் என்னுடைய உரிமைக்காக போராடுவேன்.நீதிமன்றங்களின் மூலம் நியாயம் கோருவேன்’’ என்றார்.