சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்.20ம் தேதிவரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கடந்த மாதம் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி (அக்டோபர் 13ம் தேதி) இன்று வரை அவரது நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.