சென்னை: சென்னை அறிவியல் நகரம் சார்பில் பி.எம்.பிர்லா கோளரங்க வளாகத்தில், நடைபெற்ற அறிவியல் விழா நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது, ஊரக கண்டுபிடிப்பாளர் விருது மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் உயர்கல்வித் துறைக்கு தேர்தெடுக்கப்பட்ட 50 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: சென்னை அறிவியல் விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சிறந்த அறிவியல் ஆசிரியர்களை கண்டறிந்து சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. ரூ.25,000 பரிசு தொகையும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. கிராமப்புற மக்கள் பெரும்பான்மையானவர்கள் கல்வி மற்றும் தொழில்நுட்பத்தை முறையாகப் படிக்கவில்லை என்றாலும், பல புதுமையான தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துள்ளனர். அவர்களது படைப்பாற்றல் வாயிலாக தேவைக்கேற்ற பல அரிய கண்டுபிடிப்புகள் விவசாயப் பணிகளுக்கும், சமுதாயத்தின் நன்மைக்காகவும் பயன்பட்டு வருகிறது. இத்தகைய கண்டுபிடிப்புகளை முறையாக அங்கீகரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரு சிறந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு தலா ரூ. 1,00,000 பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
அறிவியல் கண்டுபிடிப்புகளும் அறிவியல் ஆய்வுகளும் மென்மேலும் மாணவர்களால் நிகழ்த்தப்பட வேண்டும். நமது தமிழ்நாடு அறிவியலில் உலகில் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்நிகழ்ச்சிக்கு அறிவியல் நகரம் முதன்மைச் செயலாளர், துணைத் தலைவர் தேவ் ராஜ்தேவ், உயர்கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டனர்.


