சென்னை :முதலமைச்சர் பற்றிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான் என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் 2023, ஜூலை 20-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.இதுதொடா்பாக திமுகவினர் திமுக பிரமுகர் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதே போல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக புகார் தொடர்பாக சண்முகம் மீது வழக்கு பதியப்பட்டது. திண்டிவனம், விழுப்புரம் காவல் நிலையங்களில் பதியப்பட்ட 2 வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “முதலமைச்சர் பற்றிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான். அவரது பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது,”என்று கண்டனம் தெரிவித்தார். ஆனால், மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய முடியுமா என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, சண்முகத்தின் பேச்சு அரசியல் அல்ல, இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தி, அதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்பதாலேயே இந்த பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.