டெல்லி : மா விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தினோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி டெல்லியில் சந்தித்தார். அப்போது ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,670.64 கோடியை விடுவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் இருந்து காரிப்பருவ கொள்முதல் அளவை 16 லட்சம் டன்னில் இருந்து, 19.24 லட்சம் டன்னாக உயர்த்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, மா விவசாயிகளின் துயரை போக்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சக்கரபாணி, “மா விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். மா விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை தொடர்பான முதலமைச்சரின் கடிதம் ஒன்றிய அமைச்சரிடம் வழங்கப்பட்டது. மா விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.62 கோடி கேட்கப்பட்டுள்ளது. ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் கடிதம் வழங்கப்பட்டது. ஒன்றிய அரசின் பங்காக ரூ.31 கோடி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.