டெல்லி: அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்துவதற்கு லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையினர் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் எங்களை ஒரு அங்குலம் கூட பின்னுக்கு தள்ளாது என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. செம்மண் குவாரி தொடர்பாக 2012ல் தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுக்கு பிறகு தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் சைதாப்பேட்டை, எழும்பூர், பெசன்ட் நகர் உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டியில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சூர்யா பொறியியல் கல்வி என 2 இடங்களிலும் அமைச்சரின் மகன் கவுதமசிகாமணி எம்.பி. வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திவரும் சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறையின் சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இத்தகைய சோதனைகள் அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, அரசியல் சாசனத்திற்கு எதிரான கொள்கைகளை எதிர்க்கும் தலைவர்களை பலவீனப்படுத்தும் என்று பாஜக அரசு நினைத்தால், அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். உங்கள் சோதனைகளும் கைதுகளும் எங்களை ஒரு அங்குலம் கூட பின்னுக்குத் தள்ளாது” என தெரிவித்துள்ளார்.