திரிசூலம்: தமிழகத்தில் ரூ.1,018 கோடியில் புதிய மருத்துவக் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடந்த மருத்துவர் தின 2025 நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது, மருத்துவத் துறையில் சிறப்பாக பணி செய்த மருத்துவர்களை பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2.28 கோடி பேர் பயனடைந்துள்ளனர். ஐ.நா. சபையின் விருது தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் வாயிலாக 4 லட்சம் பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 19 புதிய மாவட்டங்களில் உள்ள தலைமை மருத்துவமனைகளும், 6 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் என மொத்தம் 25 இடங்களில் ஏறத்தாழ ரூ.1018 கோடி செலவில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மிக விரைவில் இந்த மருத்துவக் கட்டமைப்பு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.இந்நிகழ்வில் ஆயிரம்விளக்கு எம்எல்ஏ எழிலன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் ஜெ.ராஜமூர்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் தேரணிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.