சென்னை: தமிழகத்தில் பணியில் உள்ள மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ இடங்களை விரும்பும் வகையில் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனுப்பிய கடிதம்: நீட் எஸ்.எஸ், மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வின் 2வது சுற்றில் மாநில பணியில் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் இடங்களை தேர்வு செய்ய, மருத்துவ விண்ணப்பதாரர்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன.
ஆனால், மாநில அளவில் கட்டாய 2ம் சுற்று கலந்தாய்வு நடத்தாமல், நிரப்பப்படாத பணியிடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றுவது, தமிழ்நாடு அரசு பணியில் உள்ள மருத்துவர்கள் அவர்கள் விரும்பும் வகையில் இடங்களை தேர்வு செய்யவோ அல்லது மேற்கொண்டு கலந்தாய்வில் பங்கேற்கவோ அவர்களுக்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். மேலும், இது உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு முரணானதாகும். எனவே, மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாட்டில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து 50 விழுக்காடு இடங்களும் தக்கவைக்கப்பட்டு, மாநில அளவிலான நீட் எஸ்.எஸ் கலந்தாய்வின் 2வது சுற்றில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு உறுதி செய்யவேண்டும்.