பிரசல்ஸ்: “பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தினால் இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும்” என ஒன்றிய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அரசு முறை பயணமாக பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பாகிஸ்தான் தீவிரவாதத்தை அரச கொள்கையின் ஒரு கருவியாக பயன்படுத்துவதில் மூழ்கியுள்ள ஒரு நாடு.
அது வௌிப்படையாகவே ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, அதை இந்தியாவில் கட்டவிழ்த்து விடுகிறது. இதை இந்தியா ஒருபோதும் சகித்து கொள்ளாது. தீவிரவாதம் என்பது இருநாட்டு பிரச்னையாக இல்லாமல் சர்வதேச பிரச்னையாக கருதப்பட வேண்டும். பாகிஸ்தானின் எந்த பகுதிக்குள் தீவிரவாதம் ஊடுருவியிருந்தாலும் அங்கே ஊடுருவி சென்று இந்தியா பதிலடி கொடுக்கும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.