டெல்லி: வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது. இதனிடையே ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது பாதுகாப்பில் சிறப்பு குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஏற்கனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கமாண்டோக்கள் வழங்கும் Z-பிரிவு பாதுகாப்பு உள்ளது. 24 மணி நேரமும் அவரைப் பாதுகாக்க 33 கமாண்டோக்கள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், பாதுகாப்புப் பிரிவின் ஒரு பகுதியாக, ஒன்றிய அமைச்சரின் இல்லத்தில் 12 ஆயுதமேந்திய நிலையான காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.