சென்னை: உடல் வலிமைக்கும், செரிமானத்திற்கும் உதவும் புதிய வகையான தீபாவளி லேகியத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை, அமைந்தகரையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் 8வது தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆயுர்வேத விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டு, டாம்ப்காலின் (Tampcol) புதிய தயாரிப்பான தீபாவளி லேகியத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
இதனையடுத்து, ஆயுர்வேத தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆயுஷ் பட்டய படிப்பு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்தநிகழ்வின் போது, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் மைதிலி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் ராமலிங்கம், மாமன்ற உறுப்பினர் ராணி, இணை இயக்குநர் பார்த்திபன், மணவாளன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.