மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில், சிவசோனா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த நாசிக் மாவட்ட யேவ்லா தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், மகாராஷ்டிராவில் ஓபிசி சமூகத்தின் தலைவராகவும் சகன் புஜ்பல் (77) இருந்து வருகிறார். சிவசேனா, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருந்த சகன் புஜ்பல், கடந்த 1999ம் ஆண்டில் தேசியவாத காங்கிரசில் இணைந்தார். கடந்தாண்டு மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை பாஜக கூட்டணி பிடித்திருந்தாலும், சகன் புஜ்பலுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை. அதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம் அமைச்சராக இருந்த தனஞ்ஜய் முண்டே கொலை வழக்கில் சிக்கியதால் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமைச்சரவையில் ஒரு இடம் காலியானதால், அந்த இடத்தில் சகன் புஜ்பல் அமைச்சராக இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்படவில்ைல. நீண்ட பஞ்சாயத்துக்கு பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சகன் புஜ்பல் இன்று அமைச்சராக பதவியேற்றார். மும்பையில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்றார். இவருக்கு உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகளை ஒதுக்க முதல்வர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.