திருவனந்தபுரம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கேரள கவர்னர் மாளிகையில் நடத்த தீர்மானித்திருந்த விழாவில் வைக்கப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பயன்படுத்தும் பாரதமாதா படத்தை அகற்ற கவர்னர் மறுத்ததை தொடர்ந்து நிகழ்ச்சியை கேரள அமைச்சர் பிரசாத் ரத்து செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று கேரளாவில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாநில அரசு சார்பில் சுற்றுச்சூழல் தின விழா கேரள கவர்னர் மாளிகையில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், கேரள விவசாயத் துறை அமைச்சர் பிரசாத் மற்றும் பலர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விழா நடைபெறும் அரங்கத்தை பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் விவசாயத்துறை அமைச்சர் அலுவலக அதிகாரிகள் கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தனர். அப்போது விழா மேடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பயன்படுத்தும் பாரதமாதா படம் வைக்கப்பட்டிருந்தது. விழாவின் போது அந்தப் படத்திற்கு மலர் தூவ வேண்டும் என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு அமைச்சர் அலுவலக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரதமாதா படத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினர்.ஆனால் அதற்கு கேரள கவர்னர் மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையில் நடைபெற இருந்த விழாவை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து அரசு சார்பிலான சுற்றுச்சூழல் தின விழா திருவனந்தபுரம் தலைமைச் செயலக அரங்கத்திற்கு மாற்றப்பட்டது.