மதுரை: கீழடி விவகாரம் ெதாடர்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ மவுனம் சாதிப்பதாக எடப்பாடி பழனிசாமி படத்துடன் திமுக ஐடிவிங்கில் கார்ட்டூன் பதிவிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுகவின் ஐடிவிங்க் மாநில செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டிஆர்பி.ராஜாவை தகாத வார்த்தையால் பேசினாராம். இது திமுகவினர் மத்தியில கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுரை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 3 மனுக்கள், நேற்று மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்திடமும், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரனிடம் ஒரு மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜாவை அவமரியாதை செய்யும் வகையிலும், பொய்களை பரப்பியும் அவதூறாக பேசி உள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பொறுப்பு வகிக்கும் அமைச்சரை, நடமாட முடியாத மாதிரி செய்வேன் என்று பேசி இருப்பது நேரடியாக அச்சுறுத்தும் வகையில் உள்ளது. உள்நோக்கத்தோடு சமூகத்தில் பதற்றத்தை உண்டு செய்யும் நோக்கில், பொது அமைதியை கெடுத்து இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசி உள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
இதற்கிடையே மன்னார்குடி, பொள்ளாச்சியில் திமுக ஐடி விங்க் நிர்வாகிகள் நேற்று காலை திரண்டு வந்து முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் உருவபொம்மை, உருவ படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.