
சென்னை: தமிழ்நாட்டில் பதற்றம் ஏற்படும் அளவிற்கு பாதிப்பு எதும் ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தொற்று சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த பயிற்சியினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: கொரோனா மாதிரி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் மாதிரி பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது நாளொன்றுக்கு 5,521 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் 321 ஆக பதிவாகியுள்ளது. இந்த மாதிரி பயிற்சியில் மருந்து கையிருப்பு, ஆக்ஸிஜன், படுக்கைகள், முகக்கவசம் உள்ளிட்டவை குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவசர ஊர்திகள் எவ்வளவு உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எதிர்வரும் கொரோனாவிற்கு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக 64,281 படுக்கைகள் சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது. இதில் 33,664 ஆக்சிஜன் படுக்கைகள், 22,820 ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள், 7797 தீவிர சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 24061 ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் தயார்நிலையில் உள்ளது. 260 பிளான்ட், 130 ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள், 2067 மெட்ரிக் டன் திரவ நிலை ஆக்சிஜன் சேமிப்பு திறன் தற்போது உள்ளது.