பந்தலூர் : பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியில் ஆற்றில் மூழ்கி பலியான மற்றொரு மாணவர் குடும்பத்திற்கு, முதலமைச்சரின் உத்தரவின்பேரில் சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி பந்தலூர் அருகே பிதர்காடு சந்தக்குன்னு பகுதியை சேர்ந்த 4 மாணவர்கள் குளிக்கச்சென்றனர்.
அப்போது 2 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் பிதர்காடு சந்தக்குன்னு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார் என்பவர் மகன் குணசேகரன் (18) ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்றொருவரான சந்தகுன்னு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவிக்குமார் என்பவர் மகன் கவியரசன் (17) ஆற்று நீரில் மாயமானார். இந்நிலையில் உயிரிழந்த குணசேகரன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இதன் பேரில் சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோர் கடந்த 2 நாளுக்கு முன்பு குணசேகரன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினர். மேலும் நீலகிரி எம்பி ஆ.ராசா தனது சொந்த நிதியில் ரூ.1 லட்சம் வழங்கினார். இதைத்தொடர்ந்து காட்டாறு வெள்ளத்தில் மாயமான கவியரசன் உடலை 50 மீட்டர் தூரத்தில் முற்புதரில் நேற்று முன்தினம் மீட்டனர். அதன் பின்னர் அவரது உடலை பந்தலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு, குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
இதையடுத்து கவியரசன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் உத்தரவின்பேரில் சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அப்போது கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், தாசில்தார் கிருணமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, திமுக ஒன்றிய செயலாளர்கள் சுஜேஷ், சிவானந்தராஜா, பிரேம், நகர செயலாளர்கள் கூடலூர் இளஞ்செழியன், ஊட்டி ஜார்ஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் மாங்கோடு ராஜா, நெலாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெர்மிளா, நெல்லியாளம் நகர் மன்ற தலைவர் சிவகாமி உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.