கோத்தகிரி : கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழை பாதிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அனைத்துத்துறை அலுவலர்களும் அனைத்து முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை மிக சிறப்பாக மேற்கொண்டதற்காக எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன். மழை மற்றும் காற்றின் காரணமாக சில இடங்களில் மின்கம்பங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் போக்குவரத்தை உடனடியாக சீர் செய்து, பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்தை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். மேலும் சில இடங்களில் மின் விநியோக பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை விரைவாக முடித்து மின் விநியோகம் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு துறையின் வாயிலாக, மழையை முன்னிட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரேரணைகள் அனைத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அரசு தலைமை செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான தொகையை பெற நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அனைத்துத்துறை அலுவலர்களும் விழிப்புடனும், முழு ஈடுபாட்டுடனும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் மு.பெ.சாமிநாதன் கூறுகையில், ‘‘இந்திய வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்திற்கு 14.06.2025 மற்றும் 15.06.2025 ஆகிய இரண்டு நாட்களில் கன முதல் மிக கனமழை பெய்ய உள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், கூடலூர், குந்தா, பந்தலூர் பகுதிகளில் சுமாரான மழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அவலாஞ்சி பகுதியில் மட்டும் கூடுதலாக மழை பெய்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தபோது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் வகையில் மிக வேகமான காற்றோடு அதிக மழைப்பொழிவு இருந்தது.
இந்த முறை மழை பெய்துள்ளது. ஆனால் காற்றின் வேகம் குறைவாக காணப்பட்டது. இதனால் பெரிய அளவில் சாலை, போக்குவரத்து, அதிகம் பாதிப்பு இல்லை. சாலைகளில் விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டது. மழையினால் 8 வீடுகள் பகுதி சேதமும், 2 வீடுகள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. 2 இடங்களில் மண் சரிவும், 24 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது.
இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை மின் ஊழியர்கள் தொடர்ந்து சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் இதனை சீர் செய்ய தேவையான அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)கௌசிக், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, உதகை நகர்மன்ற துணைத்தலைவர் ரவிக்குமார், குன்னூர் நகர்மன்ற துணைத்தலைவர் வாசிம் ராஜா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்கள் குழந்தைராஜ் (மாநில நெடுஞ்சாலை), செல்வம் (தேசிய நெடுஞ்சாலை), கோத்தகிரி நகராட்சி ஆணையர் மோகன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், திட்டக்குழு உறுப்பினர் ராமசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணகுமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ், வட்டாட்சியர்கள் ராஜலட்சுமி, தினேஷ்குமார் (பேரிடர் மேலாண்மைத்துறை), கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனிதா, பிரேம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.