
சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது மதுராந்தகம் மரகதம் குமரவேல்(அதிமுக): ‘‘நெல்வாய் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை கொரோனா காலத்தில் அடைக்கப்பட்டது. தற்போது, மீண்டும் ஆலை திறக்கப்பட்டபோது, கிராம மக்களுக்கு வேலை வழங்காமல், வடமாநில தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தி தங்கு தடை இல்லாமல் உற்பத்தி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் சி.வி.கணேசன்: கொரோனா காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டன. அதில், உறுப்பினர் கூறும் நிறுவனமும் ஒன்று. அந்த நிறுவனத்துடன் மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். கடைசியாக இம்மாதம் 10ம்தேதி நடத்திய பேச்சு வார்த்தையின் மூலம் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு 12ம்தேதி 30 பேருக்கும், 17ம் தேதி 24 பேருக்கும் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 30ம்தேதிக்குள் மீதமுள்ளவர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தினர் ஒரே கட்டமாக அனைவரையும் பணிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். நாளையும் (இன்று) பேச்சு வார்த்தை நடக்கிறது.
மரகதம் குமரவேல்: ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதி செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது.
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்: எந்த தொகையும் திருப்பி அனுப்பப்படுவதில்லை. மறு ஆண்டுடன் சேர்த்து செலவு செய்யப்படுகிறது.