சென்னை: கச்சேரி சாலையில் சுரங்கம் தோண்டும் பணியில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் இருப்பினும் சுரங்கம் தோண்டும் பணிகளில் எவ்வித பாதிப்பும் இல்லை என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் ₹63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகிறது. இந்தப் பணிகளை 2028 இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 4வது வழித்தடமான கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பூந்தமல்லியிலிருந்து கிண்டி வரையிலான மேம்பாலம் அமைக்கும் பணி அடுத்தாண்டு முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. மேலும், மெரினா கடற்கரையிலிருந்து கச்சேரி சாலை வழியாக திருமயிலை வரை இரட்டை சுரங்கப்பாதைகளை அமைப்பதற்காக இரண்டு சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. கச்சேரி சாலையை அடைந்த பிறகு இந்த இயந்திரங்கள் மேலும் திருமயிலை நோக்கி செல்லும்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுரங்கம் தோண்டும் போது, அந்த இடத்தில் இருந்த ஊழியர்கள் எரிவாயு கசிவான மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைடு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். அது 10 பிபிஎம் அளவிற்கு உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக மயிலாப்பூர் கச்சேரி சாலை அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் சாந்தோம் தேவாலயத்தை கடந்து கச்சேரி சாலையில் நுழைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வாயு கசிவு காரணமாக கடந்த ஒரு வாரமாக சுரங்கம் தோண்டும் பணிகள் தடைப்பட்டுள்ளது என தவறான செய்திகள் வந்துள்ளது. சுமார் 18 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் வாயுக்களின் அளவு குறைவாகவே இருக்கும். வாயு கசிவு என்பது மண்ணிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் சுரங்கம் தோண்டும் பணியில் எவ்விதமான தடையும் ஏற்படவில்லை. பணிகள் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது. இருப்பினும் வாயு கசிவு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் சுற்றுச்சூழல் நிபுணர்கள் வரவழைக்கப்படும். மேலும் சுரங்கம் தோண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில் காற்றில்லா நிலையில் மீத்தேன் உருவாகலாம். அங்கு ஆக்சிஜன் குறைவாக இருக்கும். நீண்ட காலத்திற்கு முன்பு இப்பகுதியில் கரிமப் பொருட்கள் இருந்திருந்தால் மண் பாக்டீரியா அதை உடைத்து மீத்தேன் வெளியீட்டிற்கு வழிவகுக்கும். இருப்பினும் கார்பன் மோனாக்சைடு, ஆக்சிஜனுடன் கலந்தால் மீத்தேன் கலந்த அளவிற்கு பாதிப்பு இருக்காது. மீத்தேன் குப்பை மற்றும் கழிவுகளிலிருந்து ஏற்படும். கார்பன் மோனாக்சைடு மண்ணிலிருந்து வரும் என்பது நிரூபணமாகவில்லை. இவ்வகையான வாயு உருவாவதற்கு எதாவது செயல்பாடுகள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வகையான வாயு கசிவு உறுதியானால் அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.