திருச்சி: சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து அண்ணா விளையாட்டரங்கம் வரை இன்று ‘ரெட் ரன்’ மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் நடந்த இந்த ஓட்டத்தை கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மினி மாரத்தான் ஓட்டம் அரிஸ்டோ வளைவு, மன்னார்புரம் வளைவு, டி.வி.எஸ் டோல்கேட் வழியாக சென்று அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவுபெற்றது. இந்த ஓட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியர் சுமார் 750 பேர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாணவர், மாணவியர்கள் என்று தனித்தனியே முதல் பரிசு ரூ.10,000, இரண்டாவது பரிசு ரூ.7,000, மூன்றாவது பரிசு ரூ.5,000 மற்றும் ஆறுதல் பரிசுகள் ரூ.1,000 வீதம் 13 நபர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆண்டனி ஜோயல் பிரபு, மாவட்ட திட்ட மேலாளர் மணிவண்ணன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் புஷ்பலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.