சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையைச் சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்களின் செயல்திறன் குறித்து ஆய்வுக்கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதிவாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனே பொது ஏலத்திற்கு கொண்டுவந்து, அரசுக்கு மேலும் வருவாய் சேர்க்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களில் உள்ள தகுதி வாய்ந்த கல்குவாரிகளை ஏலத்திற்கு கொண்டு வருமாறும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு குத்தகை உரிமம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கனிம வருவாயை ஈட்ட வேண்டும். அனைத்து மாவட்ட அலுவலர்களும் குறைந்தபட்சம் மாதத்திற்கு 20 வாகனங்கள் கைப்பற்றிடவும், அனுமதியின்றி செயல்பட்ட குவாரிகள் மேல் கனிம விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மண்டல பறக்கும் படையினர் முனைப்புடன் செயல்பட்டு அதிக அளவில் வாகனங்களை கைப்பற்றி கனிம திருட்டினை முற்றிலும் தடுத்து மாநில அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டி தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆய்வு கூட்டத்தில் துறை செயலாளர், போக்குவரத்து துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் பூஜா குல்கர்னி மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.