நன்றி குங்குமம் தோழி
‘‘நினைவாற்றலை பயிற்சி செய்வதன் மதிப்பு மற்றும் நன்மைகள் குறித்து மக்களுக்கு ேபாதிய அளவில் விழிப்புணர்வு இல்லை. இதன் விளைவு பலர் மன அழுத்தப் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். அதைக் குறைக்க சில பயிற்சிகளை நாம் முறையாக கடைபிடிப்பது அவசியமாக கருதப்படுகிறது. இதன் மூலம் உடல் மட்டுமில்லாமல் மனதால் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கான தீர்வுகளை கண்டறிய முடியும்’’ என்கிறார் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணஸ்வாமி. அவர், ‘‘உங்கள் தினசரி வாழ்க்கைப் பாதையில் கவனமுள்ள பழக்கங்களைச் சேர்க்க பல வழிகள் உள்ளன. அதில் முக்கியமான மூன்று குறித்து தெரிந்து கொள்ளலாம்’’ என்றார்.
ஆரோக்கிய சிற்றுண்டி: முறையான உணவுகளை உட்கொள்வதினால், ஒருவரின் நடத்தையில் பெரிய மாற்றத்தினை பார்க்க முடியும். அதாவது, ஒருவர் உடல் பருமனால் அவதிப்படுகிறார் என்றால், அவர் தன்னுடைய உணவுப் பழக்கத்தில் சின்னச் சின்ன மாறுதல்களை கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யும் போது அது அவர்களை பெரிய அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் அதிக அளவில் மன அழுத்தம் உள்ளவர்கள், உணவினை அதிகம் உட்கொள்பவர்களாக இருப்பார்கள். குறிப்பாக வேலை செய்யும் போது ஏற்படும் மன உளைச்சல் காரணமாக துரித உணவினை சாப்பிட ஆரம்பிப்பார்கள்.
அந்த சமயத்தில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனிப்பது அவசியம். துரித உணவினை தவிர்த்து, உங்கள் உணவில் பாதாம் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். பாதாம் உங்களுக்கு பசி உணர்வினை தவிர்க்கும். குறிப்பாக மாலையில் சிற்றுண்டி நேரத்தில் அல்லது திரைப்படம் பார்க்கும் போது, ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்க, பாதாம் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களை எப்போதும் உடன் வைத்திருப்பது அவசியம். பழக்கங்களை உடைப்பது கடினம். எனவே பொறுமையாக இதனை கையாள வேண்டும். பாதாம், பருவகால பழங்கள், பாப்கார்ன் கர்னல்கள், மக்கானா மற்றும் பிற ஆரோக்கியமான தின்பண்டங்களை உங்களின் ஸ்னாக்ஸாக மாற்றிக் ெகாள்ளுங்கள்.
தியானம்: முறையான தியானப் பயிற்சி என்பது சுவாசத்தின் நினைவாற்றல், மனதினை ஒருநிலைப்படுத்த செய்யும். தியானத்தினை தொடர்ந்து வந்தால் நம் மனதினை சஞ்சலப்படுத்தக்கூடிய எண்ணங்கள் நீங்கும். மேலும் மனதில் ஒரு வித அமைதி நிலவும். எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். நம்முடைய மனதினை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட தியானம் வழிவகுக்கிறது. படுக்கையில் உட்கார்ந்து, ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களுக்கு உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் தியானப் பயிற்சியை தொடங்கலாம். பயிற்சி பெற்றவர்களிடம் ஆலோசனை பெறுவதால், உங்கள் தியான பயணம் சிறப்பாக அமையும்.
உடற்பயிற்சி: ஆய்வுகளின்படி, கவனமில்லாத உடற்பயிற்சிகளுடன் ஒப்பிடுகையில், கவலை அறிகுறிகளை குறைப்பதில் யோகா மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கவலையை குறைப்பதில் மக்களுக்கு உதவ யோகா ஒரு சாத்தியமான ஆரம்ப சுகாதார பயிற்சியாக பரிந்துரைக்கப்படுகிறது. கவலை மற்றும் மன அழுத்தம் நாம் அனைவரும் அன்றாடம் போராடும் ஒன்று. சுற்றியுள்ள நிச்சயமற்ற நிலைகள் மற்றும் மாறிவரும் சூழலால், எப்போதும் அமைதியான மனநிலையைப் பேணுவது மிகவும் கடினம். உடல் மற்றும் மன கூறுகள் இரண்டையும் உள்ளடக்கிய உடற்பயிற்சி, மனப்பயிற்சிதான் யோகாசனம். இதனை செய்வதன் மூலம் உங்கள் உடலில் மட்டுமில்லாமல் சுவாசம் மற்றும் மனம் இரண்டும் ஒருநிலைப்படும். வாரத்திற்கு 3 முறையாவது கவனத்துடன் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
தொகுப்பு: நிஷா