நாம் தற்போது அதிகளவில் அரிசி உணவைத்தான் பயன்படுத்துகிறோம். அரிசியில் உமியை நீக்கி பளபளப்பாக்கி உணவாகப் பயன்படுத்தும்போது அதிலுள்ள தயமின் என்ற வைட்டமின் அகற்றப்படுகிறது. இதனால் உடலில் சத்துக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்துசரிவிகித சத்துகளைப் பெற வேண்டுமானால் சிறுதானியங்களை அதிகளவில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களின் உமியை நீக்காமலே பயன்படுத்த முடியும். இதுபோன்ற சிறுதானியங்களின் சாகுபடி விவரம் குறித்து சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கன்னியாகுமரி வேளாண்மை அலுவலர் பென்சாம். சிறுதானியப் பயிர்களைப் பொதுவாக கார் பருவத்தில் ஜூன், ஜூலை மாதத்தில் விதைக்கலாம். ராபி பருவத்திற்கு செப்டம்பர், அக்டோபர் மாதத்திலும், கோடைப் பருவத்திற்கு ஜனவரி, பிப்ரவரி மாதத்திலும் விதைப்பு மேற்கொள்ள வேண்டும். சோளப்பயிரில் கார் பருவத்திற்கு ஏற்ற ரகங்களும், ராபி பருவத்திற்கு ஏற்ற ரகங்களும் தனித்தனியாக உள்ளன. காலநிலைக்கு ஏற்ற நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட உயர் விளைச்சல் ரகங்களை விவசாயிகள் தேர்வுசெய்து விதைக்க வேண்டும். விதைகளை நேரடியாக விதைக்கலாம் அல்லது வரிசை விதைப்பாக விதைக்கலாம். எனினும் வரிசையில் விதைப்பது சிறந்ததாகும். கேழ்வரகுப் பயிரினை மட்டும் நாற்றுப்பாவி நட வேண்டும். விதைகள் 2 முதல் 5 செ.மீ. ஆழத்தில் ஊன்றப்பட வேண்டும். பயிர் சாகுபடி செய்வதற்கு 15 நாட்களுக்கு முன் 5-10 மெ.டன் பண்ணை எரு இட வேண்டும்.
மண் பரிசோதனை அடிப்படையில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடலாம். சோளப் பயிருக்கு 7-8 கிலோ விதைகள் ஒரு எக்டருக்கு தேவைப்படும். மீதமுள்ள சிறுதானியப் பயிர்களுக்கு 5 கிலோ போதுமானது. நேரடி விதைப்புக்கு 8-10 கிலோ விதை ஒரு ஏக்கருக்கு தேவைப்படும். களைகளைக் கட்டுப்படுத்திட கோடை உழவு முக்கியம். இதனால் களை விதைகள் சூரியஒளியில் காய்ந்துவிடுகிறது. பயிர் சுழற்சி செய்வதன் மூலமும் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலமும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். வரிசையாக விதைப்பதால் இயந்திரத்தைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்த முடியும். சிறு அளவிலான நிலத்தில் கையால் களையெடுக்கலாம். களைக்கொல்லி தெளிப்பதன் மூலமும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். மானாவாரிப் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யத் தேவையில்லை. மழையைப் பொறுத்து ஒரு உயிர்த்தண்ணீர் விடுவதோடு, தூர்கட்டும் பருவம், பூக்கும் பருவம் மற்றும் கதிர் பருவத்தில் நீர்தெளிப்பான், சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து நீர்ப்பாசனம் செய்யலாம்.பொதுவாக சிறுதானியப் பயிர்களைப் பூச்சி நோய்கள் தாக்குவதில்லை. பூச்சி தாக்கிய கதிர் பயிர்களை சேகரித்து அழித்து விட வேண்டும். வயல்களில் களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். சரியான பருவத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ள வேண்டும். உரிய மழை எதிர்பார்க்கப்படும் காலங்களில் மழைப்பருவம் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன் விதைப்பு மேற்கொள்வதால் பூச்சி நோய்த் தாக்குதலைத் தவிர்க்கலாம். இனக்கவர்ச்சிப்பொறி, விளக்குப் பொறி போன்றவற்றை அமைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தால் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். நோய்களைக் கட்டுப்படுத்த அதிக உரங்கள் இடுவதைத் தவிர்க்க வேண்டும். விதைக்கும்போது விதை அளவினை அதிகப்படுத்தி விதைக்கலாம். பயறுவகைப் பயிர்களைப் பயன்படுத்தி பயிர்சுழற்சி மேற்கொள்ளலாம். நோய் எதிர்ப்புத்தன்மை உள்ள ரகங்களைப் பயன்படுத்தலாம்.
சூடோமோனாஸ், டிரைகோடெர்மா போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளைப் பயன்படுத்தலாம். விதை நேர்த்தி செய்து விதைப்பதால் நோய்த் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்ற முடியும். நோய்த் தாக்குதல் அதிகமாக இருந்தால் ரசாயன பூஞ்சாணக்கொல்லியினைப் பயன்படுத்தலாம். தற்போது 60-70 சதவீதம் சிறுதானியங்கள் அறுவடைக்குப்பின் நேரடியாக உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகள் சுயஉதவிக்குழுக்கள், பண்ணை உற்பத்திக் குழுக்கள் அமைத்து மொத்தமாக அந்தந்த பகுதிகளில் அறுவடையாகும் சிறுதானியங்களை உணவுப்பொருளாக உற்பத்தி மேற்கொள்ளலாம். குறிப்பாக சிறுதானிய மாவு, பிஸ்கட், முறுக்கு, இட்லிமாவு, ரவா, சேமியா, பாஸ்தா, அவல், மிக்சர், இனிப்பு வகைகள், கேக் தயாரித்து விற்பனை மூலம் அதிக லாபம் ஈட்டலாம். இதற்கான தொழில்நுட்பங்களை ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையம் (IIMR) வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம் தொழில் முனைவோருக்காக பயிற்சிகளையும், தேவையான இயந்திரங்களையும் வழங்குகிறது. மேலும் சிறந்த தொழில் முனைவோர்களைத் தேர்வு செய்து ஊக்கத் தொகையும், சிறப்பாக செயல்படும் தொழில் முனைவோர்களை மேலும் ஊக்குவிக்க சிறப்பு ஊக்கத் தொகையும் வழங்குகிறது. இந்த வாய்ப்புகளையும் விவசாயிகள் பயன்படுத்தலாம். மேலும் ஹைதராபாத்திலுள்ள MANAGE நிறுவனம் தொழில் முனைவோருக்கு தேவையான தொழில் நுட்பங்கள் மற்றும் பயிற்சி வழங்குகிறது. இந்த தொழில்நுட்பங்கள் மற்றும் விவரங்களைப் பயன்படுத்தி விவசாயிகளும், தொழில்முனைவோரும் பயன்பெறலாம்.
தொடர்புக்கு:
என்.சி.பென்சாம்: 94430 03044.
அறுவடைக்காலம்
சோளம் 90 – 105
கேழ்வரகு 100 – 125
சாமை 75 – 90
தினை 85 – 90
பனிவரகு 65 – 75
கம்பு 75 – 90
வரகு 125 – 130
குதிரைவாலி 90 – 100