சென்னை: பால்வளத்துறை சார்பில் ரூ.12 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பால்வளத் துறை சார்பில் ரூ.2.14 கோடி செலவில் ஈரோட்டில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு சேமிப்புக் கிடங்கு, திருநெல்வேலி மாவட்ட ஒன்றியத்தில் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி நிதியுதவியின் மூலம் ரூ.1,21 கோடி செலவில் மகளிர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நூலகம், ஆய்வகம், விடுதி வசதியுடன் கூடிய பயிற்சி நிலையக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
தர்மபுரியில் ரூ.2.72 கோடி செலவில் அலுவலகத்துடன் கூடிய பால் கொள்முதல் பிரிவுக் கட்டிடம், திருவண்ணாமலையில் பால் பவுடர் ஆலையில் ரூ.2.93 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்புக் கிடங்கு, திருப்பூரில் ரூ.3 கோடி செலவில் திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கான அலுவலக கட்டிடம் என மொத்தம் ரூ.12 கோடி செலவில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, பால் உற்பத்தி மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் வினீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.