சென்னை: விவசாயிகளிடமிருந்து பால்கொள்முதல் செய்யும்போது ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்10,771 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரம் ஒருமுறை விவசாயிகளுக்கு பால்தொகை பட்டுவாடா செய்வது நிறைவேற்றப்பட்டு விவசாயிகளிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோன்று உடனடி ஒப்புகைச்சீட்டு மூலம் விவசாயிகள் வழங்கும் பாலுக்கு தரத்திற்கேற்ற விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் வழங்கும் பாலுக்கு தோராயமான விலை என்ற நிலை மாறி தரத்திற்கேற்ற விலையை ஆவின் வழங்கி வருகிறது.