Thursday, November 30, 2023
Home » பால்வளத்தைப் பெருக்கும் கோ-5

பால்வளத்தைப் பெருக்கும் கோ-5

by Porselvi

உலக கால்நடைகளின் எண்ணிக்கையில் சுமார் 17 சதவீதம் இந்தியாவில் இருக்கிறது. ஆனாலும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியக் கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் பசுந்தீவனத் தேவையில் 42 சதவீதம் பற்றாக்குறை ஏற்படுகிறது. பசுந்தீவனப் பயிர்கள் பால் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும் கால்நடைகளை வளர்க்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் உள்ள நிலத்தில் அதிக தீவன மகசூல் கொடுக்கக்கூடிய பசுந்தீவனப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலமும் தீவனப்பற்றாக் குறையை கட்டுப்படுத்தலாம். தேசிய அளவில் வெளியிடப்பட்ட கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ – 5 என்ற ரகம் குறைந்த பரப்பளவில் அதிக மகசூல் தரும் புல் ரகமாக உள்ளது. இந்தத் தீவனப் பயிரை உற்பத்தி செய்வதன் மூலம் குறைந்த இடத்தில் அதிக பசுந்தீவனப் புல்லை உற்பத்தி செய்து பால் உற்பத்தியைப் பெருக்கலாம்.

கோ – 5 ரகத்தின்
சிறப்பியல்புகள்

 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் அதிக தூர்களுடன் வளரக்கூடிய ஒருபல்லாண்டு தீவனப்பயிராகும்.
 தண்டுகள் மிகவும் மிருதுவான, இனிப்பான, சாறு நிறைந்த, குறைந்த நார்ச்சத்து கொண்டவை.
 அதிக தூர்களுடன் (25-30 தூர்கள் / செடிக்கு) சாயாத்தன்மை கொண்டவை.
 அகலமான மற்றும் மிருதுவான இலைகள் மற்றும் அதிக இலை தண்டு விகிதம் கொண்டவை.
 பூச்சி மற்றும் நோய் தாக்கத்தை சமாளிக்கும்.
 ஆண்டுக்கு 7 முறை அறுவடை செய்யலாம்.
 அதிக பசுந்தீவன மகசூல் 350 முதல் 375 டன்கள்/எக்டர்(7 அறுவடைகளில்).

பசுந்தீவனத்தின் முக்கியத்துவம்

கால்நடைகளுக்கு பசுந்தீவனப் புற்கள் கொடுப்பதன் மூலம் பால் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் – ஏ என்ற உயிர்சத்து கிடைக்க வழிவகை செய்கிறது. மேலும் கால்நடைகளின் கண்பார்வை மற்றும் சுவாச மண்டலத்தின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுகிறது. கால்நடைகளில் கரு உருவாவதற்கும், உருவான கருவைத் தக்க வைப்பதற்கும், கருக்கலைவதைத் தடுப்பதற்கும் பசுந்தீவனப் புற்கள் வழிவகை செய்கின்றன.

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் சாகுபடி தொழில்நுட்பம்

ஆண்டு முழுவதும் எல்லா வகை மண் வகைகளிலும் இதைப் பயிரிடலாம். அதேபோல அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். நிலத்தை இரும்புக் கலப்பை கொண்டு 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தை பண்படுத்திய பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்கள் இட வேண்டும். பரிசோதனை செய்யாவிடில் ஒரு எக்டருக்கு அடியுரமாக 25 டன் மக்கிய தொழுஉரம், 75 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். மீதமுள்ள 75 கிலோ தழைச்சத்தை கரணை நட்ட 30வது நாளில் மேலுரமாக இட வேண்டும். பிறகு ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால் மகசூலை நிலை நிறுத்தலாம். பார்கள் அமைக்கப்பட்ட நிலத்தில் நன்கு நீர்ப் பாய்ச்சிய பின் இருபரு கொண்ட தண்டுக்கரணையை 60 x 50 செ.மீ. இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்யவும். இவ்வாறு நடவு செய்தால் ஒரு எக்டருக்கு 33333 கரணைகள் தேவைப்படும்.

கரணை நட்ட 3வது நாளில் உயிர் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும். பிறகு 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும். கரணை நட்ட 20வது நாள் கைக்களை எடுக்க வேண்டும். நடவுக்குப் பின் 75 முதல் 80 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அடுத்தடுத்து 45 நாட்களில் தீவனப்பயிர்களை அறுவடை செய்யலாம். இவ்வாறு சாகுபடி மேற்கொண்டால் ஒரு எக்டரில் ஒரு 7 அறுவடைகளில் 350 – 375 டன் பசுந்தீவனத்தை மகசூலாக எடுக்கலாம். எனவே, கறவைமாடு வளர்க்கும் விவசாயிகள் குறைந்தபட்ச நிலத்திலாவது கோ – 5 ரக புல்லை உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம், பால் உற்பத்தியை எளிதாகப் பெருக்கலாம். மேலும் நகர்ப்புறங்களின் அருகில் உள்ள விவசாயிகள் இப்புல்லை உற்பத்தி செய்து, ஒரு கிலோ ரூ.3 வரை விற்பனை செய்யலாம். இப்புல்லை தண்டுக் கரணை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?