சென்னை: அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியாளர்களுக்கு பாலில் உள்ள கொழுப்பு மற்றும் இதரசத்துக்கள் அடிப்படையில் கொள்முதல் விலை அதிகபட்சமாக கொழுப்பு 5.9 சதவீதம் மற்றும் இதர சத்துக்கள் 9.0 சதவீதம் உள்ள பாலுக்கு 40.95 ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிக கொழுப்புச்சத்துள்ள பாலுக்கு வழங்கப்பட்டு வந்த விலையை தரத்திற்கு ஏற்ப பிரித்து 6.0, 6.1, 6.2…….. 7.5 என தரப்பட்டியலை உயர்த்தி உச்சபட்சமாக 7.5 வரை பால் கொள்முதல் விலைப்பட்டியல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு அதிக தொகை கிடைக்கும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தரமான பால் உற்பத்தி செய்து வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் நடப்பாண்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிகர இலாபத்தில் ஈவுத்தொகை வழங்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் கால்நடைகளுக்கு காப்பீடு திட்டம், கால்நடைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் செயற்கை முறை கருவூட்டல் செய்தல் போன்ற சேவைகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் இதன் மூலம் பால் உற்பத்தி வரும் நாட்களில் கணிசமாக பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.