அகமதாபாத்: இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்து கொண்ட குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் கடந்த 10ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. அதன்பின் பாக். உளவாளிகளாக செயல்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்து கொண்டதாக குஜராத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியரை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையினர் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் லக்பத் தாலுக்காவில் வசிக்கும் சஹ்தேவ் சிங் கோஹில்(28) மாதா நோ மத் கிராமத்தில் உள்ள ஒரு அரசு மையத்தில் ஒப்பந்த சுகாதார ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2023ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த அதிதி பரத்வாஜ் என்ற முகவர் கோஹிலை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு நட்பை ஏற்படுத்தி கொண்டார். பிறகு, குஜராத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை, கடற்படை தளம், விமானப்படை தளம் தொடர்பான ரகசியங்களை கோஹிலிடம் பாகிஸ்தான் முகவர் கேட்டுள்ளார். அவர் கேட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை பணத்துக்காக கோஹ்லி அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையின் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கொருகொண்டா கூறுகையில், “கோஹில் தன் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரு சிம் கார்டை வாங்கி, அதன் ஓடிபி எண்ணை பாகிஸ்தான் முகவருடன் பகிர்ந்து கொண்டதால், பாகிஸ்தான் எண்ணுடன் இணைக்கப்பட்ட வாட்ஸ்அப்பை கோஹில் பயன்படுத்தி உள்ளார். கோஹில் பயன்படுத்திய இரண்டு எண்களும் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுவது உறுதியானது. மேலும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து கோஹில் ரூ.40,000 ரொக்கப் பணம் வாங்கியதும் தெரிய வந்தது. அவர் மீதும், பாகிஸ்தான் முகவர் மீதும் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றார்.
* அசாமில் பாக். ஆதரவாளர்கள் 76 பேர் கைது
அசாம் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கருத்துகளை பதிவிடுபவர்களுக்கு எதிராக அசாம் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பாகிஸ்தான் ஆதரவு கருத்துகளை தெரிவித்த குற்றச்சாட்டில் நல்பாரி, தெற்கு சல்மாரா மற்றும் கம்ரூப் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரை அசாம் காவல்துறை கைது செய்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு கருத்துகளுக்காக இதுவரை அசாமில் 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறி உள்ளார்.