Friday, March 1, 2024
Home » மிரட்டிய மிக்ஜாம், கொட்டித்தீர்த்த கனமழை இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை: மின் விநியோகம், போக்குவரத்து சீரானது

மிரட்டிய மிக்ஜாம், கொட்டித்தீர்த்த கனமழை இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை: மின் விநியோகம், போக்குவரத்து சீரானது

by Arun Kumar

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முழுவதும் சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மாநகர் மெல்ல மெல்ல மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று நிலவிய மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகே 90 கி.மீ. தூரத்தில் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபும், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்ய தொடங்கியது.

நேற்று காலை புயல் சென்னை அருகே நெருங்கிய போது பலத்த காற்றுடன் நகர் முழுவதும் கனமழை பெய்ய தொடங்கியது. இடைவிடாது தொடர்ச்சியாக 18 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தொடர் மழை காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவியது, பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் பால், உணவு உள்ளிட்டவை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. மழை நீர் தேங்கிய இடங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக மாநகர பேருந்துகளின் சேவையும் பாதிக்கப்பட்டது. சென்னை-செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி மார்க்கமாக செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

விமான சேவைகளும் பாதிக்கப்பட்டது. மேலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி நகரின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் தொலைதொடர்பு சேவைகளும் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அப்பகுதியில் உள்ளவர்களை காவல்துறை, தீயணைப்புத்துறையினர் படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்கவைத்தனர். முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு மாநகராட்சி மூலம் உணவு வழங்கப்பட்டது.

நேற்று பெய்த தொடர் மழையால் சென்னை நகரம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது சென்னை மீண்டு வந்துள்ளது. நேற்று இரவு 12 மணியளவில் மழை சற்று குறைய தொடங்கியது. இதையடுத்து மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. சென்னையின் பிரதான சாலைகளான காமராஜர் சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து சீரானது. மேலும் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு துறையினர் மேற்கொண்டனர்.

மேலும் மழைநீர் தேங்காத இடங்களில் நேற்று இரவே மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் இன்று காலை 7 மணியளவில் சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, பொன்னியம்மன் நகர் மற்றும் சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, கிரீம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், ராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள், இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள், சென்னை தெற்கு – I மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி, கிண்டி, ராமாபுரம், ராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி, சென்னை தெற்கு – II மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகிய இடங்களில் மின் விநியோகம் சீரடைந்தது. மேலும் இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சென்னையில் மாநகர பேருந்துகளும் இன்று இயல்பாக இயங்க தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்பட்டது, தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் நிலைமை சீரடைந்ததும் முழுவதுமாக பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை-செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு , ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் நிலைமை சீரானதும் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

seventeen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi